Monday, January 02, 2012

நண்பன் - இயக்குநர் ஷங்கரின் நேர்மை



நண்பன் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றதை சன் தொலைக்காட்சியில் புத்தாண்டு அன்று ஒளிபரப்பப் போவதாக விளம்பரம் போட்டார்கள். நடிகர் விஜய்க்கும் சன் டிவிக்கும் தான் ஆகாதே பின்னே எப்படி இது சாத்தியமாகும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே சென்ற ஆண்டின் சிறந்த பத்து படங்களின் வரிசையில் விஜய் நடித்த காவலன் மற்றும் வேலாயுதம் ஆகிய படங்கள் இடம் பெற்றிருந்தன. அது கூட பரவாயில்லை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபரோ கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் நடிகர் விஜய் கில்லி என்று போட்டாரே ஒரு போடு. ஒரு நிமிடம் இது ஜனவரி ஒன்றா அல்லது ஏப்ரல் ஒன்றா என்று ஐயமே வந்துவிட்டது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் தோன்றி சன் டிவிக்கு நன்றியும் தெரிவித்தார். ஏதோ புது வருடத்தில் நல்லது நடந்தா சரி

நணபன் இசை வெளியீட்டு விழாவில் எதிர்பார்த்த மாதிரியே எல்லோரும் விஜய் மற்றும் இயக்குநர் ஷங்கரை புகழ்ந்து தள்ள இருவரும் அடக்கமாக காட்டிக் கொண்டே இருந்தார்கள். இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் விதமாக விஜய் மேடையில் ஏறி மைக் கைக்கு வந்ததும் இயக்குநர் ஷங்கர் தான் இந்தியாவின் ஸ்பீல்பர்க் என்று ஒரு டன் ஐஸை ஒரேடியாக இறக்கினார். பின்னர் இயக்குநர் ஷங்கர் மேடைக்கு வந்து வழக்கமான சில டயலாக்குகளை பேசினாலும் முடிக்கும் தறுவாயில் பேசியது தான் ஹைலைட்டாக அமைந்தது. இந்த நண்பன் படம் வெற்றி பெற்றால் அதன் முழுப் பெருமையும் அந்த படத்தை இந்தியில் முதன் முதலில் உருவாக்கிய ராஜ்குமார் ஹிரானியையே சேரும் என்று மிகவும் நேர்மையக் சொன்னார்.

இன்று நம் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் பலரும் ஆங்கிலம் மற்றும் இந்தியாவின் பிற மொழிகளின் படங்களை நம்பியே தான் இருக்கிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை, ஆனால் நான் தழுவி தான் இந்தப் படத்தை எடுத்தேன் என்று சொல்வதற்கு ஒருவருக்கு கூட துணிவில்லை. இந்தப் படத்தின் பெருமை அதன் ஒரிஜினலுக்கு தான் சேரும் என்ற குறைந்தபட்ச நேர்மை கூட யாருக்கும் இருப்பதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் தெய்வத்திருமகள் படம் தான். படத்தை பார்த்த நம் வலையுலக நணபர்கள் சில ஸ்டில்களையும் வெளியிட்டு அந்த படம் தழுவல் கூட இல்லை அட்டைக் காப்பி என்று எழுதி இருந்தார்கள். நம் வருண் கூட அவன் இவன் என்று ஏக கோபத்தில் எழுதி இருந்தார். இந்த மாதிரி படத்தை சுடுபவர்கள் தொலைக்காட்சியில் தோன்றி ஆளாளுக்கு ஏதோ தங்கள் சொந்த மூளை மற்றும் உழைப்பை உபயோகப்படுத்தியது போன்ற ஒரு பில்டப்பை உருவாக்குவார்கள். இந்த ஓவர் பில்டப் தான் நமக்கு மிக அதிக எரிச்சலை ஏற்படுத்தும். இந்த ஒரு விஷயத்தாலேயே இயக்குநர் ஷங்கர் மிகவும் வித்தியாசப்பட்டு நிற்கிறார். இவர்கள் கூட ஒப்பிடும் போது நிஜமாகவே இயக்குநர் ஷங்கருக்கு கோவில் கட்டியே கும்பிடலாம்

இயக்குநர் ஷங்கர் சில சின்னச் சின்ன விஷயங்களில் கூட மெனக்கெடுவார். இந்த நண்பன் பட டைட்டிலை பார்த்தால் கம்ப்யூட்டர் கீபோர்டின் நம்பர் விசைகளின் மேலே காணப்படும் எழுத்துக்களை வைத்தே உருவாக்கி இருக்கிறார்கள். விழாவின் போது ஷங்கர் எந்திரன் பட ஷூட்டிங்கின் போது தான் இந்தியில் 3இடியட்ஸ் படம் பார்த்ததாக தெரிவித்தார். இந்தி 3இடியட்ஸ் படத்தில் ஒரு பிரசவம் பார்க்கும் காட்சி வரும். ஷங்கரும் தன்னுடைய எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ பிரசவம் பார்ப்பது போன்ற காட்சியை வைத்து இருந்தார். அவரின் மற்ற படங்களிலும் அமீர் கான் பாதிப்பு இருக்கும். அதே போல் நடிகர் விஜய்யின் படங்களிலும் அமீர் கான் பாதிப்பு இருக்கும். இருவரும் சேர்ந்த்து நிச்சயம் ஒரு நல்ல ரீமேக் தான் செய்து இருப்பார்கள் என்பது உறுதி. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கதாநாயகியைக் காணோம். இந்தி 3இடியட்ஸ் படத்திலேயே கதாநாயகிக்கு ஒரு வேலையும் கிடையாது. தமிழில் சுத்தமாக இருக்காது போலிருக்கு

பொங்கலுக்கு வெளிவரும் நண்பன் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவோம்

0 comments:

நண்பர்கள்