கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு

Monday, January 02, 2012

நண்பன் - இயக்குநர் ஷங்கரின் நேர்மை



நண்பன் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றதை சன் தொலைக்காட்சியில் புத்தாண்டு அன்று ஒளிபரப்பப் போவதாக விளம்பரம் போட்டார்கள். நடிகர் விஜய்க்கும் சன் டிவிக்கும் தான் ஆகாதே பின்னே எப்படி இது சாத்தியமாகும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே சென்ற ஆண்டின் சிறந்த பத்து படங்களின் வரிசையில் விஜய் நடித்த காவலன் மற்றும் வேலாயுதம் ஆகிய படங்கள் இடம் பெற்றிருந்தன. அது கூட பரவாயில்லை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபரோ கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் நடிகர் விஜய் கில்லி என்று போட்டாரே ஒரு போடு. ஒரு நிமிடம் இது ஜனவரி ஒன்றா அல்லது ஏப்ரல் ஒன்றா என்று ஐயமே வந்துவிட்டது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் தோன்றி சன் டிவிக்கு நன்றியும் தெரிவித்தார். ஏதோ புது வருடத்தில் நல்லது நடந்தா சரி

நணபன் இசை வெளியீட்டு விழாவில் எதிர்பார்த்த மாதிரியே எல்லோரும் விஜய் மற்றும் இயக்குநர் ஷங்கரை புகழ்ந்து தள்ள இருவரும் அடக்கமாக காட்டிக் கொண்டே இருந்தார்கள். இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் விதமாக விஜய் மேடையில் ஏறி மைக் கைக்கு வந்ததும் இயக்குநர் ஷங்கர் தான் இந்தியாவின் ஸ்பீல்பர்க் என்று ஒரு டன் ஐஸை ஒரேடியாக இறக்கினார். பின்னர் இயக்குநர் ஷங்கர் மேடைக்கு வந்து வழக்கமான சில டயலாக்குகளை பேசினாலும் முடிக்கும் தறுவாயில் பேசியது தான் ஹைலைட்டாக அமைந்தது. இந்த நண்பன் படம் வெற்றி பெற்றால் அதன் முழுப் பெருமையும் அந்த படத்தை இந்தியில் முதன் முதலில் உருவாக்கிய ராஜ்குமார் ஹிரானியையே சேரும் என்று மிகவும் நேர்மையக் சொன்னார்.

இன்று நம் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் பலரும் ஆங்கிலம் மற்றும் இந்தியாவின் பிற மொழிகளின் படங்களை நம்பியே தான் இருக்கிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை, ஆனால் நான் தழுவி தான் இந்தப் படத்தை எடுத்தேன் என்று சொல்வதற்கு ஒருவருக்கு கூட துணிவில்லை. இந்தப் படத்தின் பெருமை அதன் ஒரிஜினலுக்கு தான் சேரும் என்ற குறைந்தபட்ச நேர்மை கூட யாருக்கும் இருப்பதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் தெய்வத்திருமகள் படம் தான். படத்தை பார்த்த நம் வலையுலக நணபர்கள் சில ஸ்டில்களையும் வெளியிட்டு அந்த படம் தழுவல் கூட இல்லை அட்டைக் காப்பி என்று எழுதி இருந்தார்கள். நம் வருண் கூட அவன் இவன் என்று ஏக கோபத்தில் எழுதி இருந்தார். இந்த மாதிரி படத்தை சுடுபவர்கள் தொலைக்காட்சியில் தோன்றி ஆளாளுக்கு ஏதோ தங்கள் சொந்த மூளை மற்றும் உழைப்பை உபயோகப்படுத்தியது போன்ற ஒரு பில்டப்பை உருவாக்குவார்கள். இந்த ஓவர் பில்டப் தான் நமக்கு மிக அதிக எரிச்சலை ஏற்படுத்தும். இந்த ஒரு விஷயத்தாலேயே இயக்குநர் ஷங்கர் மிகவும் வித்தியாசப்பட்டு நிற்கிறார். இவர்கள் கூட ஒப்பிடும் போது நிஜமாகவே இயக்குநர் ஷங்கருக்கு கோவில் கட்டியே கும்பிடலாம்

இயக்குநர் ஷங்கர் சில சின்னச் சின்ன விஷயங்களில் கூட மெனக்கெடுவார். இந்த நண்பன் பட டைட்டிலை பார்த்தால் கம்ப்யூட்டர் கீபோர்டின் நம்பர் விசைகளின் மேலே காணப்படும் எழுத்துக்களை வைத்தே உருவாக்கி இருக்கிறார்கள். விழாவின் போது ஷங்கர் எந்திரன் பட ஷூட்டிங்கின் போது தான் இந்தியில் 3இடியட்ஸ் படம் பார்த்ததாக தெரிவித்தார். இந்தி 3இடியட்ஸ் படத்தில் ஒரு பிரசவம் பார்க்கும் காட்சி வரும். ஷங்கரும் தன்னுடைய எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ பிரசவம் பார்ப்பது போன்ற காட்சியை வைத்து இருந்தார். அவரின் மற்ற படங்களிலும் அமீர் கான் பாதிப்பு இருக்கும். அதே போல் நடிகர் விஜய்யின் படங்களிலும் அமீர் கான் பாதிப்பு இருக்கும். இருவரும் சேர்ந்த்து நிச்சயம் ஒரு நல்ல ரீமேக் தான் செய்து இருப்பார்கள் என்பது உறுதி. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கதாநாயகியைக் காணோம். இந்தி 3இடியட்ஸ் படத்திலேயே கதாநாயகிக்கு ஒரு வேலையும் கிடையாது. தமிழில் சுத்தமாக இருக்காது போலிருக்கு

பொங்கலுக்கு வெளிவரும் நண்பன் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவோம்

Tuesday, December 27, 2011

தனியாக டீ ஆற்றிய பிரதமர்



நம் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாட்டுக்கு வந்ததும் அது சம்மந்தமான செய்தி மற்றும் வீடியோக்களை பார்த்து இருப்பீர்கள். அப்படி பார்க்கவில்லை என்றால் மேலே இருக்கும் முக்கியமான வீடியோவை பார்க்கவும். தமிழகம் வந்த பிரதமரை முதல்வர் என்ற முறையில் செல்வி ஜெயலலிதா விமான நிலையம் சென்று வரவேற்கிறார். பின்னர் சம்பிரதாயப்படி சில அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அப்புறம் தன் அமைச்சரவை சகாக்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அப்புறம் சம்பிரதாயப்படி மத்திய மந்திரிகள் சிலர் வந்து அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு அருகே நிற்கும் மாநில முதல்வருக்கும் மரியாதை செலுத்திவிட்டு செல்கிறார்கள். இதுவரை எல்லாம் நல்லா தான் போய்கிட்டு இருந்தது

அப்போது தான் திருப்புமுனையாக நுழைகிறார் ஒருவர். அவர் வேறு யாரும் அல்ல கடந்த ஆட்சியில் மதுரையை மாநகரத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்த அஞ்சாநெஞ்சன் அழகிரி தான். அவருடன் காங்கிரசின் செல்லப்பிள்ளையான தயாநிதி மாறனும் உடன் வருகிறார். பிரதமருக்கு மரியாதை செலுத்திய அழகிரி அருகே நின்று கொண்டு இருக்கும் ஜெயலலிதாவுக்கும் மரியாதை செலுத்துவார் என்பது தமிழ்நாட்டு அரசியலில் எதிர்பார்க்க முடியாதது தான். ஆனால் முல்லைப்பெரியாறு விவகாரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்நேரத்தில் நாங்கள் கட்சி வேறுபாடு இன்றி ஒன்றுபட்டு நிற்போம் என்று அறிக்கைகளை பத்திரிக்கைகளில் வாசித்ததால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடித் தான் போய்விட்டது

முதல்வருக்கு மரியாதை செலுத்தாத மத்திய அமைச்சரோ சும்மா இருக்காமல் லேசாக ஒரு நக்கல் சிரிப்பை வேறு உதிர்த்துவிட்டு செல்கிறார். குசும்பு பிடித்த நக்கீரனோ இதை ஸ்லோமோஷனில் வேறு காட்டுகிறது. அண்ணனே மரியாதை செலுத்தாததால் அவரை பின் தொடர்ந்து அவரது தம்பிகளும் அவ்வாறே செய்கின்றனர். சும்மாவே ஆடும் நம் முதல்வர் அண்ணன் வந்து உடுக்கையை வேறு அடித்துவிட்டு சென்றுவிட்டதால் கடுப்பாகி அபவுட்டர்ன் போட்டு தன் காரில் ஏறி இடத்தை காலி செய்துவிட்டார். ஆளும் கட்சியும் இல்லாமல் எதிர்க்கட்சியும் இல்லாமல் நம் பிரதமர் தன் கட்சிக்காரர்களுடன் கொஞ்ச நேரம் தனியே செலவிடுகிறார்

இப்போது இந்த நிகழ்வுகளை எல்லாம் வெறும் அரசியல் நிகழ்வகவோ அல்லது நகைச்சுவையாகவோ பார்த்துவிட்டு வழக்கம் போல் நாம் கடந்து சென்றால் நம்மைவிட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரளா மாநில முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் ஒன்றாக சென்று பிரதமரை சந்திக்கிறார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டிலோ பிரதமருக்கு முன்னிலையில் தங்கள் ஈகோவை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். ஏற்கனவே சேட்டன்கள் லாபி முழு நேரம் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆங்கில ஊடகங்களில் நம்முடைய தரப்பு வாதத்தை முன்வைக்க ஒரு நாதி கூட இல்லை. நம் அரசியல் தலைவர்கள் இப்படி எல்லாம் நடந்து கொண்டால் நமக்கு தான் நட்டம்

Monday, December 19, 2011

ஜெயலலிதா - சசிகலா: டமார்

Thursday, December 15, 2011

ஒரு ரசிகனின் உள்ளக் குமுறல் - வீடியோ

Wednesday, December 07, 2011

முல்லை பெரியாறு - சேட்டன்களின் சேட்டை

கேரளத்து சேட்டன்மார்கள் மீண்டும் தங்கள் சேட்டைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். முல்லை பெரியாறு விவகாரம் மீண்டும் செய்திகளில் அடிபட துவங்கியதில் இருந்து கேரளத்து சேட்டன்மார்கள் சிலர் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் உச்சகட்டமாக தமிழகத்தில் இருந்து ஆண்டு தோறும் சபரி மலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. பக்தர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை எந்த ஒரு இந்து அமைப்பும் இதுவரை கண்டிக்காதது மிகப் பெரிய வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன் திருவனந்தபுரம் சென்ற போதே அங்கு பா.ஜ.க. கொடி தான் பறந்து கொண்டு இருந்தது. இப்போது நிச்சயம் அவர்கள் இன்னும் வலுவாகவே இருப்பார்கள். பக்தர்கள் என்றாலும் அவர்கள் தமிழர் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் எங்கே மலையாளி ஓட்டை இழக்க நேரிடுமோ என்று கணக்கு போட்டிருப்பார்கள் போல

இதே மாதிரி தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எந்த ஒரு இந்து அமைப்பும் கூட இதை கண்டித்ததாக தெரியவில்லை. கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று போர் முரசு கொட்டிக் கொண்டு இருக்கும் இராமநாதபுர மாவட்ட பாரதீய ஜனதா கட்சிகள் கூட கண்டித்ததாக தெரியவில்லை. சேட்டன்மார்களுக்கு எப்போதும் தமிழன் என்றால் ஒரு இளப்பம் இருக்கும் போல. சந்திரமுகி படம் வெளிவந்து சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருந்த சமயம் உடன் பணிபுரியும் ஒரு சேட்டனிடம் இதுவரை தமிழில் வந்த படங்களிலேயே சந்திரமுகி தான் வசூலில் விஞ்சியிருக்கிறது என்று சொன்ன போது. அவர், ஓம், சந்திரமுகி படத்தின் ஒரிஜினல் மலையாள படமாக்கும். பின்னே எங்கனம் ஹிட்டாகாமல் போகும். அதுவும் நாங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே பார்த்து ரசித்த திரைப்படத்தை நீங்கள் எல்லோரும் இப்போது தான் பார்க்கிறீர்கள் என்று சொன்னார். இத்தனைக்கும் அவர் வீணே மலையாள ஜம்பம் பேசித் திரியும் ஆசாமி அல்ல

முல்லை பெரியாறு செய்திகள் அடிபட துவங்கிய முதல் நாளே இந்த பிரச்சினையில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே தோன்றியது. ஆனால் என்னவாக இருக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலையில் இருந்தது. அந்த உள்குத்து என்னவென்று அடுத்த சில நாட்களிலேயே செய்திகளின் மூலம் தெரிந்தது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி முல்லை பெரியாறு அணைக்கும் கூடங்குளம் அனு உலைக்கும் முடிச்சு போட்ட போது ஆகா இது தான் அந்த உள்குத்தா என்று விளங்கியது. முல்லை பெரியாறு அணை பிரச்சினை அவ்வப்போது தலைகாட்டினாலும் இப்போது மீண்டும் தலைதூக்கி இருப்பதற்கு காரணம், மத்தியிலும் கேரளத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி. அதிலும் இப்போது தமிழகத்தில் வேறு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தேர்தலுக்கு முன் காங்கிரசுக்கு நேசக்கரம் நீட்டிய ஜெயலலிதாவோ தேர்தலில் கிடைத்த அபரிதமான வெற்றிக்குப் பின்னர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதிற் கொண்டு பா.ஜ.க. பக்கம் தனது பார்வையை திருப்பி இருக்கிறார். குஜராத்தில் மோடியின் உண்ணாவிரத்தத்துக்கு ஆதரவளித்த ஜெயலலிதா மறவாமல் அத்வானியின் ரத யாத்திரைக்கும் ஆதரவளித்து இருக்கிறா. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் யார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு வசதியாக இருக்க வேண்டும் அல்லவா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட சமீபத்தில் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதற்கு வைக்கப்பட்ட செக் ஆகக் கூட இருக்கலாம். ஏற்கனவே 2Gயை வைத்து தி.மு.க.வை காங்கிரசு கட்டம் கட்டிவிட்டது. அடுத்து தன் பார்வையை அ.தி.மு.க. பக்கம் செலுத்தி இருக்கிறது. இதில் ஜெயலலிதா வெல்வாரா காங்கிரசிடம் தோற்றுவிடுவாரா என்று போகப் போகத் தான் தெரியும். இந்த விவகாரத்தால் ஒருவகையில் அவருக்கும் லாபம் தான். இப்போதெல்லாம் யாருமே அதிகரித்து வரும் மின்வெட்டு பற்றியோ, விலைவாசி பற்றியோ பேசக் காணோம். இது அவருக்கு எதிர்பாராத லாபம் தான், அவர் தான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலியாச்சே

Tuesday, November 29, 2011

தினமலர் - தமிழன் என்றோர் இனமுண்டு

ஓரிரு நாட்கள் முன்பு தான் சரத்பவாரை ஒருவர் அறைந்துவிட்டார் என்று மீடியா முழுக்க செய்திகள். சொல்லி வைத்தாற்போல் பெரிய பிரபலங்கள் எல்லாம் இதை கண்டித்து அறிக்கைவிட்டு இருந்தார்கள். இன்னும் சிலர் இப்போதைய வளர்ந்து வரும் மாறிவிட்ட டிரெண்டு படி பல பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை டிவிட்டர் மூலம் தெரிவித்து இருந்தார்கள். இவர்களில் பலர் வெளிப்படையாக கண்டிப்பது போல் கண்டித்தாலும் சில பிரபலங்களின் டிவிட்டுகளில் வழக்கம் போல் எள்ளலும் நக்கலும் புரையோடி கிடந்ததை கண்கூடாக காண முடிந்தது. பிரபலங்களே இப்படி நடந்து கொள்ளும் போது நம் தினமலர் மட்டும் சும்மா இருக்குமா, அது தன பங்கிற்கு  சரத்பவாரை அறைந்தவருக்கு ஒரு இந்துத்வா அமைப்பு பரிசளித்ததை செய்தியாக போட்டு தன் கடமையை செவ்வனே ஆற்றியது

இது எல்லாம் நடந்து ஓரிரு தினங்களிலேயே தினமலர் நிருபரும் தாக்கப்பட இப்போது தினமலர் அரற்றுகிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பது தினமலருக்கு மிக மிகப் பொருந்தும். இந்த தினமலர் நிருபர் தாக்கப்பட்ட விஷயத்தில் நாமும்
தினமலர் போல் நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். இந்த தினமலர் நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்கதே. தினமலர் பாணியில் நாமும் இதை ஆதரித்து அதே மாதிரி நடந்து கொள்ள வேண்டாம். உணர்ச்சிவசப்பட்டு நாம் இது போன்ற செயல்களை ஆதரிக்க முற்படும் போது பல விஷயங்களை நம்மை அறியாமல் மறந்துவிடுகிறோம்

முதலில் தினமலர் நிருபர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிலர் கைதாகி இருக்கிறார்கள். ஏற்கனவே பேரறிவாளன் விஷயத்தில் அவரின் வயதான தாயார் மேடை மேடையாக ஏறி கண்ணீர் மல்க தன் மகனுக்காக உரை ஆற்றி வருவதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். இப்போது
கைதானவர்களுக்கும் குடும்பம் இருக்கும் தானே அவர்களும் இதனால் பாதிப்படைவார்களே. மேலும் நடிகைகளுக்கு ரேட் வெளியிட்ட விஷயத்திலும் இதே மாதிரி ஒரு நிருபர் தான் கடைசியில் பலிகடாவாக்கப்பட்டார் என்று அறியப்பட்டோம்

தமிழுணர்வாளரான நண்பர் ஒருவர் சொன்னதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வது மிகப் பொருத்தமாக இருக்கும் நம்முடைய இதிகாசங்களை எல்லாம் பாருங்கள் என்றார். நீதி தவறியதற்காக உயிரை விட்டான் ஒருவன், பசுவின் கன்றுக்காக தன் மகனை பலியிட்டான் மற்றொருவன், முல்லைக்கு தேரீந்தான் ஒருவன், மயிலுக்கு போர்வை போர்த்தினான் மற்றொருவன் - இப்படித் தான் இருக்கின்றன நம் கதைகள். இதையே மறைந்து இருந்து அம்பு விடுவதோடும், தேர்க்காலில் நின்றவன் தலையை
கொய்வதோடும் ஒப்பிட்டு பாருங்கள் என்றார் அந்த நண்பர். அதனால் தான் அன்றே சொன்னார்கள்

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு

Monday, November 21, 2011

அமெரிக்காவில் விலை ஏறினால் மட்டும் குதிப்பாங்களே?

தமிழகத்தில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட பால் மற்றும் போக்குவரத்து கட்டண உயர்வுகள் மிகவும் வருந்தத்தக்கதாகும். ஏதாவது ஒரு விலையை ஏற்றினாலே அதன் பாதிப்பு பல இடங்களில் எதிரொலிக்கும் ஆனால் யாரைப் பற்றியும் கொஞ்சமும் கவலைப்படாமல் ஒன்றிற்கு மேற்பட்ட விலை உயர்வினால் ஏற்படும் விளைவுகளை சொல்லவே வேண்டாம். விலை ஏற்றத்துக்கு அரசு சொன்ன காரணம் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது தான். ஆனால் இந்த கூற்று முழுக்க முழுக்க பொய்யான ஒன்று என்பது ஜெயலலிதா கொடுத்த ஒரு பேட்டியின் வீடியோ மூலம் வெட்டவெளிச்சமாகிவிட்டது



விலை ஏற்றத்துக்கு அரசு சொன்ன காரணத்தைவிட சில அதிமேதாவிகள் சொல்லும் விளக்கம் தான் மிகப் பெரிய காமெடியாகி இருக்கிறது. அரசு மீது அதிக கடன் சுமை இருக்கிறது என்றும் அதனால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாது எனவும், நாம் வாங்கும் சம்பளம் மட்டும் உயர வேண்டும் ஆனால் விலை மட்டும் உயரக் கூடாதா என்றும் சால்ஜாப்பு சொல்லி வருகிறார்கள் அடிப்பொடிகள். இந்த அடிப்பொடிகள் பலர் அமெரிக்காவில் இருந்து கொண்டு பல மக்களை பாதிக்கும் பல விஷயங்களில் தங்கள் மேதாவித் தனமான கருத்துக்களை உதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு கிண்டல் மற்றும் நக்கல் நையாண்டி பண்ணிக் கொண்டு இருப்பார்கள்

இவர்கள் எல்லொரும் இப்படி அமெரிக்காவில் இருந்து கொண்டு இப்படி கேனத்தனமாக நடந்து கொண்டு இருக்கிறார்களே இவர்கள் வேலை செய்யும் அமெரிக்காவிலும் கடன் சுமை விண்ணைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவும் இதே மாதிரி தன் கடன் சுமையை குறைக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு எல்லா விலையையும் ஏகமாக ஏற்றினால் இதே மாதிரி தான் நியாயப்படுத்திக் கொண்டு இருப்பார்களா? அமெரிக்காவிலும் பல அரசு சேவைகள் நட்டத்தில் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அங்கேயும் இதே மாதிரி பஸ் மற்றும் ரயில் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறார்கள். அப்போது இதே அதிமேதாவிகள் தான் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் எகிறிக் குதித்துக் கொண்டு இருந்தார்கள்

இவர்கள் எல்லோருக்கும் ஒரே மனப்பான்மை தான், அது தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி ஜூஸ் என்பது தான். இதில் வேதனையான விஷயம் இந்த அதிமேதாவிகள் இணையத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருப்பது தான்


நண்பர்கள்